கனடாவில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
குறித்த இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 வயது இலங்கைப் பெண் ஒருவரும் ஒரு நாயும் உயிரிழந்ததுடன் 26 வயது ஆண் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.
கனேடிய செய்திகளின்படி, கனடாவின் மார்க்காமில் உள்ள ஒரு வீட்டிற்குள் இரட்டை துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் 20 வயதான நிலாக்ஷி ரகுதாஸ் என்ற இலங்கையை சேர்ந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தொடர்ந்து, அவர் சிகிச்சையளிக்க கொண்டு செல்லப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளார். இத்தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள், கருப்பு, நான்கு கதவுகள் கொண்ட வாகனத்தில் வீட்டை விட்டு வேகமாக ஓடி வருவதைக் கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், “இது குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடா என்று விசாரிக்கப்படுகிறது. மேலும் இந்த வீடு கடந்த காலங்களில் பலமுறை குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” என்று சம்பவ இடத்திலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை பொலிஸார் அந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், கடந்த ஆண்டு மூன்று முறை அழைப்புக்கள் வந்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.அந்த சம்பவங்களில் பல சந்தேக நபர்கள் தூரத்திலிருந்து வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதுடன் கடந்த ஆண்டு பெப்ரவரியில் அந்த வீட்டில் ஒரே நேரத்தில் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதுடன் அடுத்த மாதத்திலும் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.எனினும் அந்த சம்பவங்களில் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், கனேடிய கொலை விவகார பிரிவு இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.