இந்தியாவின் ஆதரவு இல்லாமல் இலங்கையின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படாது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளார்.
இலங்கை தனது வளர்ச்சிக்காக இந்தியாவின் நெருக்கத்தை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவா் இதனை தொிவித்துள்ளாா்.
அவா் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்தியாவின் உதவி கிடைக்கவில்லை என்றால், 2050 ஆம் ஆண்டிற்குள் இலங்கை இன்னும் அதிக ஏழ்மையிலேயே இருக்கும்.
இந்தியா நம்முடைய மிக முக்கியமான அண்டை நாடு, அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா அல்ல.
எனவே, இலங்கை தனது வளர்ச்சிக்காக இந்தியாவின் நெருக்கத்தை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்.
ஊழல் மற்றும் பொருளாதார குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட இலங்கை, 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய நிதிச் சிக்கல்களை சந்தித்தது.
அப்போது இந்தியா, 4.3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியதால் நாடு முற்றிலும் சரிந்து போகாமல் தப்பியது.
இந்தியாவின் அதானி குழுமம் உள்ளிட்ட முக்கிய முதலீட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்ததற்குக் காரணம், இந்திய அரசின் உறுதுணை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் இலங்கை வளர்ச்சியடைய முதலீடுகளை உறுதி செய்ய வேண்டும். அதற்காக இந்தியாவுடன் நெருக்கமாக செயல்படுவது நமது ஒரே தேர்வாகும். அரசின் மாற்றம் எதுவாக இருந்தாலும், இந்தியாவின் ஆதரவை நிராகரிக்கக்கூடாது என்றும் ரணில் விக்ரமசிங்க இதன்போது தொிவித்துள்ளார்.