தொழில் வாய்ப்பின்மை உட்பட நாட்டிலுள்ள எந்தவொரு பிரதான பிரச்சினைக்கும் இவ்வாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தொிவித்துள்ளாா்.
குறித்த வரவு செலவுத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தொிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அங்கு தொடர்ந்தும் கருத்து தொிவிக்கையில்,
தொழில் வாய்ப்பின்மை உட்பட நாட்டிலுள்ள எந்தவொரு பிரதான பிரச்சினைக்கும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் தீர்வு முன்வைக்கப்படவில்லை. அதிலுள்ள வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமானதா என்பது சந்தேகத்துக்கிடமானது.
வரி வருமானம் மற்றும் கடன் பெறுவதைத் தவிர அரசிடம் வேறு எந்த மாற்றுத்திட்டமும் இல்லை. அதன் காரணமாகவே வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராகவே நாம் வாக்களித்தோம்.
முற்று முழுதாக சர்வதேச நாணய நிதியத்தின் தேவைக்கமையவே இந்த வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. அரச நிர்வாகம் தொடர்பில் அரசு இன்னும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவா் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.