யாழ்ப்பாணம் நகர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த நீராகாரங்களை அதிகமாக அருந்துமாறு மக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் என். சூரியராஜா வெளியிட்டுள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தொிவிக்கையில்,
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக தொிவித்த பிரதீபராஜா, இதன் காரணமாக, ஏப்ரல் 3 முதல் 10ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறியுள்ளார்.
மேலும், அந்தமான் தீவுகளின் போட்பிளேயர் அருகே ஏப்ரல் 3ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை, ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இதன் நகர்வுப் பாதை மற்றும் அது கரையை கடக்கும் இடம் குறித்து உறுதியாக தெரிவிக்க இன்னும் சில நாட்கள் வேண்டும்.
இதன்படி, சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்வரும் மழை காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
அத்துடன், ஏப்ரல் 5 முதல் 9ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படும்.
எனவே, கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வாளர் நா. பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.