இந்திய திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில், இந்தியாவின் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CBI) தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் தவறான முடிவெடுத்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றுகளின் அடிப்படையில், வழக்கில் தொடர்புடையவர்களுக்கு எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று CBI தெரிவித்துள்ளது.
சுஷாந்தின் காதலி ரியா சக்ரவர்த்தி, அவரது குடும்பத்தினர் மற்றும் சில மருத்துவர்கள் மீது முன்னதாக இருந்த குற்றச்சாட்டுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதன் மூலம் வழக்கின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சுஷாந்தின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த வழக்கு, இந்திய திரையுலகத்திலும், அவரது ரசிகர்களிடையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, CBI தனது இறுதி முடிவை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மேலும் எந்த நடவடிக்கைகளும் எதிர்பார்க்கப்படவில்லை.