தமிழகத்தில் 2020 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட தகவலின் படி, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழகத்தில் 6,597 படுகொலைகள் நடந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஆபத்தான நிலைமை தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற நபர், அண்மையில் அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், இதன் ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நடத்தப்படும் பல்வேறு குற்றச்செயல்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு சட்டம் ஒழுங்கை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது என்றும் அவா் இதன்போது மேலும் தொிவித்துள்ளாா்.